டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று ஐ.என்.எஸ். மீடியா வழக்கு குறித்து நேற்று காலை முதலே விசாரணை மேற்கொண்டு வந்தனர். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் லுக் அவுட் போஸ்டரும் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றிரவு ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரது வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
பின்னர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தங்களது காரில் அவரை சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டார்.
சிபிஐயின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதில், ‘இன்று டெல்லியில் திமுக முன்னின்று பல்வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் காஷ்மீரில் வீட்டு காவலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் மந்திரிகள் வெளியிடப்பட வேண்டும் என்பதே ஆகும். மேலும் காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டு வர வேண்டும்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தின் கைது கண்டிக்கத்தக்கது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்தது, நாட்டிற்கே அவமானம். இந்த கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பது தெரிகிறது’ என கூறியுள்ளார்.
‘சட்டசபையில் இருந்து என்னை வெளியேற்றியபோது சட்டையை கிழித்துக் கொண்டு எஸ்கேப் ஆனது போல் சிதம்பரத்துக்கு சி பி ஐ மீது பிளேட்டை திருப்பி போடத் தெரியவில்லை.’ என்றார். மேலும் அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் இல்லம் ஆகிய இடங்களில் எதிர்காலத்தில் சிபிஐ, ராணுவம், அமலாக்கத்துறை போன்றவை எகிறி குதிக்க முடியாமல் இருக்க அங்குள்ள காம்பவுண்டு சுவர்களை உயர்த்திக்கட்ட உடன்பிறப்புக்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், சிமிண்டு செங்கல்லை அடித்து பிடுங்க உடன்பிறப்புகள் விரைந்துள்ளதாகவும் டுபாகூர் செய்தி குறிப்பில் கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.