அரசியல் சாசன பதவி.., முதல்வரே ரிப்போர்ட் செய்ய கூடிய உயர்ந்த இடம்.. குடியரசு தலைவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டிய அவசியம் கொண்ட அதிகாரம்.. இத்தனையும் கொண்ட ஆளுநர் பதவியில் அமருகிறார் தமிழக மண்ணின் மகள் தமிழிசை சவுந்தரராஜன்.

ஞாயிற்றுக்கிழமை, இது தொடர்பாக அறிவிப்பு வந்தபோது, மொத்த நாட்டு மக்களை போலவே, தமிழிசைக்கும் அது சர்ப்ரைஸ் செய்திதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் எனக்கும் ஆளுநர் பதவி குறித்து தகவல் தெரிந்தது என்று நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியோடு சொல்லியுள்ளார் ஒரு பேட்டியில்.

ஒரு நாள் முன்பாக, உங்கள் பெயரை எப்படி முழுமையாக எழுதுவீர்கள், அந்த எழுத்துருவை தெரிவியுங்கள் என்று முக்கியமான இடத்தில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்து கேட்டனர். அப்போதும் கூட எனக்கு எதற்காக என புரியவில்லை.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை குடியரசு தலைவரே எனது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். அப்போது நான் 100 அடி சாலையில் உள்ள அம்மன் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு இருந்தேன். எனவே, எனது பாதுகாவலர், தமிழிசை சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார் என்று, போனில் பதில் அளித்துள்ளார்.

நான் வெள்ளிக்கிழமைதான் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை என்னால் கோவிலுக்கு போகமுடியவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான், இந்த போன் அழைப்பு வந்தது.

அந்த அம்மனுக்கும் எனக்கும் ஒரு பந்தம் உள்ளது. நான் டிஜிஓ படிக்கும்போது முதல் நாள் அங்குதான் சென்று கும்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அதிக மதிப்பெண்ணில் பாஸ் செய்தேன். வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பும் வந்தது. நல்ல மருத்துவராகவும் பணியாற்றிறேன்.

நான் சாமி கும்பிட்டு விட்டு வந்து திரும்ப போனில் அழைத்தேன். அப்போது குடியரசு தலைவர் பேசி தகவல் சொன்னார். எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் போய் நீங்க பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுங்கள், அதுதான் முதல்படி என்று குடியரசு தலைவர் கூறினார்.

அதன்படி அலுவலகம் சென்று, 44 லட்சம் உறுப்பினர்களை சேர்ந்து கொடுத்த நானே, எனது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழிசை சவுந்தரராஜன், 1999ம் ஆண்டு முதல் இத்தனை ஆண்டுகாலமாக பாஜகவுக்கு உழைத்ததற்கு கட்சி தலைமை இந்த அங்கீகாரத்தை ஏற்கனவே தமிழக முதல்வராக பன்வாரிலால் பதவி ஏற்ற பிறகு கொடுத்துள்ளது.

கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினருமே, ஆளுநர் தமிழிசைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு காரணம், கட்சி பாகுபாடு, கொள்கை வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, தமிழிசையை ஒரு தமிழச்சியாக தமிழக மக்கள் பார்ப்பதுதான்.

சரிதானே? எல்லாம் சரி… ஆனா அந்த 44 லட்சம் உறுப்பினர்கள்ன்னு சொன்னீங்க பாருங்க மேடம், அத அதைத்தான் என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை….என்று புலம்பினார் கப்ஸா நிருபர்.

பன்வரிலால் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டது போல் தமிழிசை நாடுமுழுவதும் உள்ள கழிவறைகளை, தெலுங்கானாவில் உள்ள குளியல் அறைகளையும் ஆய்வு மேற்கொண்டு மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை மேற்கொண்டு பரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானாவில் மீம் கிரியேட்டர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

பகிர்