ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் மூலம் கேட்டு கொண்டிருந்தார். அதன்படி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்., “கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு திமுக பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும், திருக்குறளையும், தமிழ் மொழியையும் திமுகவினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர் தவிர மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சிக்கவில்லை.

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘ஓட்டுக்காக’ தமிழ் மொழியையும், திருக்குறளையும் உலக அரங்கில் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று, தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றார்.

திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களுக்கும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும்.

இது ஒரு சிறு முயற்சி என்றாலும் இதை அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவிக்கையில், மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் பேசி ஒப்புதல் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்பட்டு வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழக பாஜக கட்சி அமைச்சரின் இந்த ட்விட்டர் பதிவு குறித்து வரவேற்று இருப்பதாக அதனுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துக்கொண்டார். திருவள்ளுவரை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரின் இந்த ‘அறிவிப்பு சலம்பல்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த அறிவிப்பிற்கு பாஜக தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் பற்றிய எந்த பிரச்சினையும் அதாவது அவர் என்ன மதம், சாதி என்பது உட் பட அனைத்தும் தானாகவே அடங்கி விடும்.

‘பாஜக’ வால் இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள பிரச்சனைகள் கிளம்புமோ ? கிளப்பிவிடப்படுமோ? பாவம் வள்ளுவர் ஏன் பிறந்தோம் ஏன் எழுதினோம் என நொந்து கொண்டிருப்பார் என்ற நிலை உருவாகி உள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அமைச்சரின் இந்த ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி வருகிறது.

இதனை வரவேற்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்” என்று பதிவிட்டார்.

பால் பாக்கெட்டில் ஒரு பாதிக் குறளை எழுதி வச்சு மீதி பாதியை சொன்னால் தான் பால் பாக்கெட்டை ஓபன் பண்ண முடியும்ங்கிற மாதிரி பண்ணலாமா, எனவும் தமிழக அரசு பரிசீலிக்கிறது. அதற்கு, நாங்க டீ கடைல வாங்கி குடிப்போம்… டீ கடைகாரன் படிக்கட்டும். என்றார் ஒரு ‘டாஸ்மாக்’ குடி மகன்.

பகிர்