தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த சூழலில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஆகும். இதையடுத்து 17ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அரசியல் கட்சி தொடங்கப்படாத சூழலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் இல்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது. அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ரஜினி ரசிகர்கள் சிலர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மாநில தலைமையின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர பகுதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது.

மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாநில நிர்வாகி சுதாகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியை மிகவும் கண்டிப்புடன் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க இந்த மண் ரஜினி மண்- என இயக்குனர் பி.வாசு ஒரு விழாவில் பேசினார். ‘இந்த மண் என்னை ஏத்துக்குச்சு, இந்த மக்கள் என்னை ஏத்துக்கிட்டார்கள். இனிமேல் வாழ்ந்தாலும் இங்கேதான், விழுந்தாலும் இங்கேதான். என் கடைசி மூச்சு இந்த மண்னில்தான், இனி ரிட்டையர்டே கிடையாது, இங்கே செட்டில்தான்’ என்று ரஜினி பணக்காரன் பட வசனத்தை மேற்க்கோள் காட்டி பேசினார்.

இந்த மண் அவருடைய மண் என்று அப்போதே நான் சொன்ன விஷயம்தான். என்றும் மேடையில் உளறி உள்ளார். இப்புடி மொட்டையா சொன்னா எப்புடி வாசு சார்..ஒரு லோடு மண் எவ்வளவு ஒரு யூனிட் எவ்வளவு லாரி வாடகை எவ்வளவு? ஆற்று மணலா எம்சாண்ட் மணலா? அதையும் கேளுங்க. சுவற்றில் ஒட்டுமா ஒட்டாதா என அப்பாவியாக கேட்டார் ஒரு கிழட்டு ரஜினி ரசிகர்.

பகிர்