தலிபான் பாணியில் தப்லிக் ஜமாத் குற்றம் செய்துள்ளது, இது அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல, மிக மோசமான குற்றச்செயல் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மத வழிபாடு மாநாடு தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை இந்த மாநாட்டுக்கு வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘‘தலிபான் பாணியில் தப்லிக் ஜமாத் குற்றம் செய்துள்ளது. இது அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. மிக மோசமான குற்றச்செயல். நாடுமுழுவதும் மக்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சூழலில் இதுபோன்ற செயல் மன்னிக்க முடியாதது. கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஊரடங்கை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முஸ்லிம் மதத் தலைவர்கள் இதுதொடர்பாக சமூக மக்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கொரோனா பரவும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தங்கி இருந்த 2 ஆயிரத்து 361 பேரும் வெளியேற்றப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இவர்களில் 617 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மற்ற அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இங்கிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மூலம் CAA NRC போன்ற போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்து வெற்றி கண்ட பாஜக அரசு, தற்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது கொரோனா நோயாளி முத்திரை குத்தி குல்லா போட்டு, சுலபமாக அவர்களை தனிமைப்படுத்தி, நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது என கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்