தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் அதிக துடிப்புடன் இயங்கியது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடன் இருந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து புள்ளி விவரங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தி வந்தார். மருத்துவமனைகளில் ஆய்வு, செய்தியாளர்கள் சந்திப்பு என பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் அமைச்சர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் அமைச்சருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்கள் அமைச்சர் விஜயபாஸ்கரை சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பார்க்கமுடியவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் நடத்தினார். அமைச்சரோ சொந்த தொகுதியில் கட்சிப்பணிகளிலும் கொரோனா நிவாரண பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

கடந்த மூன்று நாள்களாக கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நடத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடனான ஆலோசனைக்கூட்டத்தில் மட்டுமே பங்கேற்று வருகிறார். மருத்துவமனை பார்வையிடுவது என வழக்கமான பணிகளில் அமைச்சர் ஈடுபட்டு வருகிறார். மாநில முதல்வர்களுடனான பிரதமரின் நேற்றைய ஆலோசனையின் போதும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாலையில் நடந்த அமைச்சரவை ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இருந்தனர். ஆனால் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பை தலைமைச் செயலாளர் சண்முகமே நடத்தினார். சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவருடன் வந்து சென்றார். இந்தச் சந்திப்பின்போது, `பீலா ராஜேஷ் ஏன் தற்போது பதிலளிப்பதில்லை. அவர் ஓரங்கப்படுகிறாரா?’ என நிருபர் ஒருவர் கேட்டார்.

அதற்கு தலைமைச் செயலாளர் சண்முகமோ, “சுகாதாரத்துறை செயலாளருக்கு அந்த துறை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் தெரியும். தலைமை செயலாளர் என்ற முறையில் பல்வேறு துறைகள் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால் உங்களுக்கு நிறைய தகவல்களை தெரிவிக்க முடியும். சுகாதாரத் துறை செயலாளர் என்ற முறையில் அந்த துறைச்சார்ந்த தகவல்கள் தெளிவாக அவர்களிடத்தில் இருக்கும். உங்களுக்கு முழுத்தகவலும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வருகிறேன். வேறு ஒன்றுமில்லை” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் புறக்கணிப்பை சுட்டிக்காட்டி இன்று பேசினார். “மிகப்பெரிய சுகாதாரப் பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார். சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில், அவரையும் புறந்தள்ளியது யார்? தலைமைச் செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்வது முதல்வர்தான். தலைமைச் செயலாளரை செய்தித் தொடர்பாளராக்கி செய்யப்படும் கழுத்தறுப்பு அரசியல் ஏன்?” என்றுக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

இதற்கு உடனடியாக அமைச்சர் ஜெயக்குமார் பதில் கொடுத்தார். “கொரோனா விவகாரத்தில் பல துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள். ஒரு துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட அதிகாரிகள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் அனைத்து துறைச்சார்ந்த தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்பதால் தலைமைச் செயலாளர் பிரஸ் மீட் நடத்தினார். தலைமைச் செயலாளர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார். இப்படி பீலா ராஜேஷ் பிரஸ் மீட் விவகாரம் அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்தான், இன்றைய கொரோனா விவரங்களை வழங்குவதற்காக மூன்று நாள்கள் கழித்து பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இதுவரை 50 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது” என்று தனக்கே உரிய பாணியில் கொரோனா தொடர்பான விவரங்களை அளித்தார்.

பீலா ராஜேஷ் புறக்கணிப்புக்கு காரணம் அவரைத் ‘தங்க மங்கை’ என்று வர்ணித்து வந்த யூடியூப் வீடியோ என்று கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் தான் அடுத்த முதலமைச்சர் எனவும் கூட்டத்தில் ஒருவர் கத்தியதாக தெரிகிறது. தொலைக்காட்சிகளில் தொடர் பிரேக்கிங் நியூஸ்களில் விஜயபாஸ்கர் / பீலா ராஜேஷ் தோன்றுவதால், அவர்களுக்கு மக்களிடம் அதிகரிக்கும் செல்வாக்கு நாளை அவர்கள் தேர்தலில் நின்றால் வாக்குகளாக மாறிவிடும் என்று அலர்ட்டான அதிமுக தலைமை, சீட்டுக் குலுக்கிப் போடுவது, இங்கி பிங்கி பாங்கி, மியூசிக்கல் சேர் முறையில், தினம் ஒருவராக சுகாதாரத் துறை அறிக்கை அளிக்க வேண்டும் என அதிமுக தலைமையின் கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்