தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3-ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 18ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 4-ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

அதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும். காவல் துறை நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும். புதிய தளர்வுகள் பெருநகர் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும். கோயம்புத்தூர், சிறிய கார்கள் அரசு பணிகள், தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும் வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் இருவரும் (ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம், மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னர் திறந்து இரண்டு நாட்களில் மூடிய பின்னர் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் மதுபான கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. டோக்கன் வழங்கி கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், வழக்கத்தை விட விற்பனை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்று இருந்த டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரம் இனிமேல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து வில்லேஜ் விஞ்ஞானி செல்லூர் ராஜூ அளித்த கப்சா சிறப்பு பேட்டி அளித்தார். ஊரடங்கு தருணத்திலும் டாஸ்மாக் திறப்பு குறித்த கப்சா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கூறியதாவது: நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்து மதுபானம் பெறுவதால், நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு கூடுதலாக 2 மணி நேரம் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில், கோவிலுக்கு செல்லத் தடை மற்றும் ஸ்கூலுக்கு செல்ல தடை ஆனால் டாஸ்மார்க் கடைக்கு தடை இல்லை. வாழ்க்கையில் அனைவருக்கும் பிறப்பும் இறப்பும் ஒரு முறை தான். அதில் கலந்து கொள்ளக் கூட தடை. ஏனெனில் கோவில் மற்றும் ஸ்கூல் மற்றும் பிறப்பும் இறப்பும் விசேஷங்களுக்கு சென்றால் கொரோனா ஒட்டிக் கொள்ளும். டாஸ்மாக் சென்றால் ஆல்கஹால் ஆன்டிசெப்டிக் இருப்பதால் கொரோனா மடிந்து போய்விடும். இரண்டு மணி நேர நீட்டிப்புக்கு பிறகும் வசூல் அதிகரிக்கவில்லை என்றால், வீட்டுக்கு ஒருவர் குடித்தே ஆக(சாக) வேண்டும் என அரசு அறிவித்தாலும் அறிவிக்கும்,” என்றார்

பகிர்