கேரளாவின் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது என்று அந்த மாநில முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வரின் இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் நபர், கேரளாவில்தான் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கண்டறியப்பட்டார். இதையடுத்து விழித்துக் கொண்ட அந்த மாநில அரசு கொரோனா வைரஸ் பரவல் நடவடிக்கைகளை தீவிர மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது.

ஐ.நா.வின் சுகாதார அமைப்பே பாராட்டும் விதத்தில், கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கியமாக, அந்த மாநிலத்தில் இன்னும் ஓராண்டுக்கு பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேரள அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், “கேரளாவின் சில இடங்களில் கொரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளது” என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“திருவனந்தபுரம் மாவட்டத்துக்குட்ட கடலோர பகுதிகளான பூனதுரா, புலவிலா உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது. இதன் தீவிரத்தை உணர்ந்து குறிப்பிட்ட இப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று யாரிடம் இருந்து யாருக்கு பரவுகிறது என்று கண்டறிய முடியாமல் போனால், அது சமூக பரவலாக மாறிவிட்டதாக கருதப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் “கொரோனா சமூக பரவலாகவில்லை – பரவலாக சமூகத்தில் உள்ளது” என்று தொடர்ந்து காமெடி பண்ணி வரும் வேளையில், கேரள முதல்வர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகிறது.

பகிர்