கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசப்பட்டதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அருண்கிருஷ்ணன் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மிகமுக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பெரியார் ஈ.வே.ராமசாமி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற விஷயங்களுக்காக அரும்பாடப்பட்ட இவரது சிலைகள், அவ்வப்போது சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தார். மேலும், பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அளித்த கப்சா பேட்டியில், “பெரியார் சிலை மேல் காவிச்சாயம் பூசவில்லை, யாரோ பீடா போட்டு ‘புளிச்’ என்று துப்பி தான் விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.