கரோனா வைரஸ் தொற்றை ஆரம்பக்கட்ட நிலையில் அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிரைப் பாதுகாக்கலாம் என்பதற்கு நான் உதாரணம் என, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி இன்று (ஆக.3) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். கரோனா வைரஸ் தொற்றால் நான் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன். 40 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ளேன். வைரஸ் தொற்றை ஆரம்பக்கட்ட நிலையில் அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிரைப் பாதுகாக்கலாம் என்பதற்கு நான் உதாரணம்.

எனவே, மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் அனைவருக்கும் சித்த மருத்துவ சிகிச்சையான கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இறந்த மூவரில் இருவர் வயதானவர்கள். இருவரும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

இ-பாஸைப் பொறுத்தவரை உரிய காரணம் இருந்தால் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்த வாரம் மதுரை, திருநெல்வேலி செல்கிறார். அடுத்த முறை நாமக்கல் மாவட்டம் வர உள்ளார்.

டாஸ்மாக் பணியாளர்கள் கரோனா பாதிப்பால் இறந்ததால் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. மின் கட்டணம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கும் முறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் இருந்த காரணத்தினால் கட்டணம் அதிகம் வந்துள்ளது. மாதம் ஒரு முறை வசூலிப்பது உள்ளிட்டவை தொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசனை நடத்தப்படும்”. இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி மருத்துவ சிகிச்சைக்குப் பின் முழுவதுமாகக் குணமடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினர் தரப்பில் ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதும் தொடர்ந்து வருகிறது.

மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசன்னா, இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் பிரசன்னா, சமூக ஊடகத்தில் ட்வீட் தட்டிவிட…. மின் கட்டணம் குறித்த செய்திகள் தடதடக்க ஆரம்பித்தன.

‘ஷாக்’ ஆன தமிழ்நாடு மின்சார வாரியம், நடிகர் பிரசன்னாவின் வீட்டு மின் கட்டண கணக்குகளை ஆய்ந்துபார்த்து, மின் உயர்வுக்கான காரணங்களை விளக்கமாக எடுத்துவைத்தது. இதையடுத்து, பிரசன்னாவும் அமைதியானார். ஆனாலும்கூட, பொதுமக்களிடையே கொரோனா தொற்றைவிடவும் வேகமாக மின் கட்டண உயர்வு குறித்த செய்திகள் தொற்றிகொண்டு அலைக்கழித்து வந்தன. தற்போது பொதுமக்களின் சாபமும், பிரசன்னாவின் செய்வினையும் அமைச்சர் தங்கமணிக்கு தொற்றை ஏற்படுத்தியதாக கப்சா நிருபர் வெற்றிலையில் மை வைத்துப்பார்த்து கண்டறிந்துள்ளார்.

பகிர்