முதல்வர் வேட்பாளர் யார் என்றும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது பற்றியும் கட்சித்தலைமை முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது கட்சியின் கருத்தல்ல என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர் செல்வம் கட்சியை வழிநடத்தி வருகிறார். இரண்டு தலைமை இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி பல கருத்துகள் உலா வருகின்றன. அதிமுகவில் முதல்வர் யார் என்று முதலில் பரபரப்பை கிளப்பியவர் அமைச்சர் செல்லூர் ராஜூதான். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்தான் சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்று கொளுத்தி போட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு பதிலடி தரும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய ட்வீட் ஒன்று போட்டார். அதில் எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! என்று பதிவு போட்டார். இன்று மதுரையில் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தலை சந்தித்திருக்கிறோம். அதே போல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம் என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமி எளிமையின் அடையாளமான முதல்வர் வலிமையான அரசு என்று என்று நிரூபித்திருக்கிறார் என்றும் கூறினார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இந்த பஞ்சாயத்து நடுவேதான் முதல்வர் வேட்பாளர் பற்றி புதிய கருத்து ஒன்றை கூறியுள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னரே முதல்வர் யார் என்று கட்சி முடிவு செய்யும் என்று கூறினார்.

முதல்வர் வேட்பாளர் பற்றி பொதுவெளியில் பேசினால் கட்சி பலவீனமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறிய கருத்து கட்சியின் கருத்தல்ல என்றும் கூறியுள்ள அமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும், மலர வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக என்ற ஆலமரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று விபி துரைசாமி கூறியிருக்கிறார் இது அவரது கருத்தா கட்சியின் கருத்தா என்பது தெரியாது. பாஜக தலைமையில் கூட்டணி என்று கட்சியின் தலைவர் முருகன் கூறினால் அதுபற்றி பின்னர் முடிவு செய்யப்படும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அதிமுக முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சாக்லேட் பாய் என நல்ல அர்த்தத்தில் தான் உதயநிதியை குறிப்பிட்டேன் சொல்லபோனா, திமுக பரம்பரையே பிளே பாய் தாங்க என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சின்னம்மா தான் நிரந்தர முதல்வர் என்று முழக்கமிட்ட கூவத்தூர் குரூப் இப்பொழுது முதல்வர் பதவிக்காக அடித்துக் கொள்கிறது.. ஈபிஎஸ் ஓபிஎஸ் ஜெயக்குமார் செல்லூர் ராஜூ விஜயபாஸ்கர் பீலா ராஜேஷ் ரஜினி கமல்ஹாசன் விஜய் விஷால் என ரேசன் கடை கியூ போல் முதல்வர் வேட்பாளர் பட்டியல் நீளும் போலயே என்றார் கப்சா நிருபர்.

பகிர்