விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று புதிய தளர்வை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மாவட்டங்களுக்கு இடையே வாகனங்களில் பயணம் செய்வதற்கு இந்த உத்தரவு பெரிதும் உதவும். மேலும், இ பாஸுக்கு லஞ்சம் பெற்று வழங்கும் முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல ஆகும்.

மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகள் அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய் பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும், இ பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுக்கவும் பயணிக்க, (மாவட்டங்களுக்கு இடையே) ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல், ஆதார் அல்லது குடும்ப அட்டை விபரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி என்னுடன் விண்ணப்பித்தால் எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பம் செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொரஓனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கொரோனா விரைந்து கட்டுக்குள் வருகிறது. அதனால் முடிந்தவரை இபாஸ் வழக்கத்தை வைத்து கல்லாகட்ட வேண்டும். ஊரடங்கு முடிந்ததும் தங்கமுட்டை வாத்து டாஸ்மாக் திறந்துவிடும், தினசரி கலக்ஷன் பேருந்து போக்குவரத்து ஆரம்பித்துவிடும், கைசெலவுக்கு பஞ்சமில்லை” என்று இன்னொரு ரகசிய கப்சா அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

பகிர்