உத்தரப் பிரதேசத்தில் உள்ள லஷ்மிப்பூர் கேரியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது தலித் சிறுமியின் உடல் ஆகஸ்ட் 16ஆம் தேதி அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
அதற்கு ஆறு நாட்கள் முன்பு அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த சுதிக்ஷா பாட்டி எனும் இளம்பெண் புலந்தசகர் மாவட்டம் அவுரங்காபாத் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் அவர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தார்.
இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த இருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நோக்கில் துரத்தி வந்ததால் அந்த விபத்து நடந்து அவர் உயிரிழந்தார் என்று சுதிக்ஷா பாட்டியின் குடும்பம் குற்றம் சாட்டுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில் ஆறு வயது சிறுமி ஒருவர் ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அதன்பின்பு அவர் ரத்த காயங்களுடன் புதர் ஒன்றில் தூக்கி வீசப்பட்டார். அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
லந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 8 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு முயற்சி நடந்துள்ளது. அவர் குரல் எழுப்ப முயன்றதால் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அந்த சிறுமியின் உடல் கரும்பு தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிறுமியின் கொலை நடந்த அதே ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,”உத்தர் பிரதேசத்தில் மிகவும் குறைவான குற்றங்களே நடக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சட்டம் – ஒழுங்கு முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளது. இனிவரும் காலங்களில் இது மேலும் நல்ல நிலைக்கு செல்லும்,” என்று கூறியுள்ளார்.
பதினேழு – பதினெட்டு நாட்கள் இடைவெளியில் நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் உத்தரபிரதேசத்தில் குற்றம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பது குறித்த மிகவும் குரூரமான காட்சியை அளிக்கின்றன.
இவை அனைத்தும் ஊடகங்களில் வெளியான செய்திகள். ஊடகங்களில் செய்தியாகாமல் போன சம்பவங்கள் பலவும் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,” இந்த நாட்டில் ராமராஜ்ஜியம்தான் இருக்கவேண்டும்; சோசியலிசம் இருக்கக்கூடாது; ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது,” என்று கூறினார்.
ஆனால் இவர் கூறும் ராமராஜ்ஜிதில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது இதற்கு எதிர்மறையான பதில்களே கிடைக்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேசம் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ததாக 3 லட்சத்து 78 ஆயிரத்து 777 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அவற்றில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 59 ஆயிரத்து 445 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது நாடு முழுவதும் பதிவான வழக்குகளில் 15.8 சதவீத குற்றங்கள் இந்த மாநிலத்தில் நடந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 4,322 பாலியல் வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் நாள்தோறும் 11 முதல் 12 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் புகார் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. வழக்கே பதிவு செய்யாமல் போன சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
ஊடகங்களுக்கு வழங்கும் பேட்டியின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் குறைவான குற்றங்களின் நிகழ்வதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப்பிடுகிறார். அப்பொழுது பெண்களின் பாதுகாப்புக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறார்.
ஆனால் மாநில அரசு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் தரவுகளில் இத்தகைய குற்றங்கள் மிகவும் அதிக அளவில் நிகழ்வதாக அறியமுடிகிறது.
எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நொய்த் ஹஸன் என்பவர் எழுப்பிய கேள்விக்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த உத்தரப் பிரதேச அரசு 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2017ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான குற்றங்களும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சராக 2017ம் ஆண்டு மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக ஆன்ட்டி-ரோமியோ ஸ்குவாட் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நிகழாமல் இந்த குழு உறுதி செய்யும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஒன்றாக செல்லும் இளம் இணைகளை ஆன்ட்டி-ரோமியோ ஸ்குவாட் என்றும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது அமைக்கப்பட்ட சில நாட்களில் அதாவது மார்ச் 30, 2017இல் ராம்பூரில் சாலையில் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்த சகோதர சகோதரிகளே மிரட்டி காவல் நிலையத்திற்கு இந்த குழுவினர் அழைத்து வந்தனர். தாங்கள் இருவரும் சகோதர சகோதரிகள் என்பதை மருந்து வாங்குவதற்காக வந்த அந்த இளைஞர் நிரூபித்த பின்னரும் அவர்களை விடுவிக்க ஐந்தாயிரம் ரூபாய் காவல்துறையினர் லஞ்சமாக கேட்டதாக அப்போது புகார் எழுந்தது. அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை விட்டுவிட்டு அவர்களே பிறரின் பாதுகாப்புக்கு இடையூறாக மாறுவதாக பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆன்ட்டி-ரோமியோ குழுவினரை மீண்டும் மறுசீரமைக்க வேண்டும் என்று ஜூன் 2019ஆம் ஆண்டு யோகி தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டது.
எனினும் இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக அறியமுடியவில்லை.
யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அகிலேஷ் யாதவ் 2016ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, அதாவது மகளிர் தினத்தன்று 181 என்ற பெண்கள் பாதுகாப்புக்கான அவசர உதவி எண்ணை சோதனை அடிப்படையில் 11 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார்.
இதை நிர்வகிக்கும் பொறுப்பு ஜிவிகே எமர்ஜன்ஸி மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2017ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதைத்தொடர்ந்து 11 மாவட்டங்களில் மட்டுமே சோதனை முயற்சியில் அமல்படுத்தப்பட்டு இருந்த இந்த உதவி எண் திட்டம் 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால் இதற்கான நிதியை சென்ற பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கவில்லை.
இந்த உதவியின் திட்டத்தை கையாளும் 350க்கும் மேலான பெண் பணியாளர்களுக்கு பதினோரு மாத காலத்துக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த உதவி எண் மூலம் பெண்களுக்கு மீட்பு வாகனம் மனநல ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. நிதி பற்றாக்குறை காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவும் இயக்கத்தில் இல்லை.
இதைத்தொடர்ந்து காவல்துறை உதவியாக இருந்த 112 எனும் எண்ணுக்கு பாதுகாப்பு கோரும் பெண்களும் அழைத்து தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று ஜூலை 24ஆம் தேதி மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பிற குற்றங்களுக்காக அழைக்கப்படும் அதே எண்ணை ஆபத்தில் உள்ள பெண்களும் அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனியான அவசர உதவி எண் எதுவும் தற்போது உத்தரப் பிரதேச மாநில அரசால் இயக்கப்படவில்லை.
‘பச்சை’ குழந்தையை ‘பாழ்’பண்ணினாலும் ‘பாஜக’-வாக இருந்தால் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆதித்யநாத் ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பதே இப்படி பச்சிளம் குழந்தைகள் முதல் பருவப் பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் என கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.