சுமார் 7 மணி நேரம் வரை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் சோனியா காந்தியே அக்கட்சியின் இடைக்கால தலைவராக நீடிப்பது என்கிற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும், காங்கிரஸ் தலைமையகத்திற்கு தினசரி வரக்கூடியவருமான ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்று சுமார் 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினர். அந்த 23 தலைவர்களில் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக கருதப்படும் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருந்தது தான் விவாதமானது. சோனியா காந்தி ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் 23 முக்கிய தலைவர்கள் எழுதிய கடிதம் புயலை கிளப்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியா தன்னால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இனியும் நீடிக்க முடியாது என்று முடிவெடுத்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு அனுப்பினார். இது குறித்து பேசவே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் கட்சியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் சோனியாவின் உதவியாளர் கே.சி.வேணுகோபால் முதலில் பேசினார். அப்போது அவர் சோனியாவிற்கு 23 பேர் எழுதிய கடிதம் எப்படி ஊடகங்களுக்கு கிடைத்தது என்கிற கேள்வியோடு கூட்டத்தை துவக்கினார்.

தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, தன்னால் இனியும் காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்றும் உடனடியாக புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறைகளை தொடங்குமாறு காரிய கமிட்டியை கேட்டுக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.ஆண்டனி, அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் சோனியா அவசரப்படக்கூடாது என்றனர். தொடர்ந்து சோனியாவே காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றனர். அப்போது பேசிய அகமது படேல், காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ராகுல் காந்தியே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, வழக்கம் போல் கேள்விகளை மட்டும் கேட்க தொடங்கினார். சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லாத சமயத்தில் இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன என்று சீனியர் தலைவர்களை பார்த்து கேட்டார். எங்கள் கடிதத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று குலாம் நபி ஆசாத் விளக்கம் அளித்தார். இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு பாஜகவுடன் ரகசிய உறவு இருப்பதாக ராகுல் பேசிவிட்டதாக செய்திகள் கசிந்தன. அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உடனடியாக பதிலடி கொடுத்தார். 30 வருடங்களாக காங்கிரசுக்கு தான் விசுவாசமாக இருப்பதாகவும் தன்னை எப்படி பாஜகவுடன் தொடர்புடையவன் என ராகுல் கூறலாம் என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

இதனால் காங்கிரசில் மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி இடையே மோதல் வெடித்துவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால்அடுத்த சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை கபில் சிபல் நீக்கினார். ராகுல் காந்தி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சீனியர் தலைவர்களுக்கு எதிராக தான் எதுவும் அப்படி பேசவில்லை என ராகுல் விளக்கம் அளித்ததாகவும் கபில் சிபல் தெரிவித்தார். இப்படி காரசாரமாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் வரை கூட்டம் நடைபெற்ற நிலையில் இறுதியில் இடைக்கால தலைவர் பதவியில் சோனியாவே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கப்சா செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 6 மாதங்களுக்குள் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது என்கிற முடிவுடன் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு பெற்றது. சீனியர் தலைவர்களின் ஆதிக்கம் இருக்கும் வரை காங்கிரசுக்கு தான் மீண்டும் தலைவராகப்போவதில்லை என்று ராகுல் திட்டவட்டமாக கூறி வருகிறார். எனவே சீனியர் தலைவர்கள் சிலர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகினால் மட்டுமே ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவராவார், அல்லது ரஜினி அரசியலில் சேரும் வரை ‘காந்தி’ குடும்பம் தான் தலைமைப் பொறுப்பு வகிக்கும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்

பகிர்