தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். டெல்லிக்கு பாஜக ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஏதாவது ஒன்றுடன்தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும் என்று மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்களும், ஒருவரை ஒருவர் உரசிப் பார்ப்பதும் உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த விபி துரைசாமி தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று தஞ்சாவூரில் நிரூபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.கவின் கல்வியாளர்கள் பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.

இதில் பேசிய மாநில பாஜக தலைவர் எல். முருகன், ” தேசியக் கல்வி கொள்கை சிறப்பாக உள்ளது. இது வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதாக அமைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும்தான் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது. இதையும் அரசியலாக்குகின்றனர். நான் மற்றொரு மொழி தெரியாமல் கஷ்டப்படுகிறேன். தமிழகத்தில் வரும் காலம் பாஜகவின் ஆட்சிக் காலம். நாங்கள் ஆட்சி அமைப்பது வெகு தூரத்தில் இல்லை. நமது எம்எல்ஏ.க்கள் கோட்டையை அலங்கரிப்பார்கள். அதுவரை ஓயமாட்டேன்” என்றார்.

இதற்கிடையே தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியிருந்தார். இதுகுறித்து இன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மதுரையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ”கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். டெல்லிக்கு பாஜக ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஏதாவது ஒன்றுடன்தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும்”

பகிர்