திமுகவின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியான நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த க.அன்பழகன் வயோதிகம் காரணமாக காலமானார். இதனால், பொதுச் செயலாளர் பதவி காலியானது. பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பொதுச் செயலாளர் பதவியில் போட்டியிட, பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் துரைமுருகன் திமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. கரோனா தாக்கம் காரணமாக திமுக பொதுக்குழு கூடுவது தள்ளிப்போனது. இதனால், மீண்டும் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காணொலி மூலமாக பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து, பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக பொதுக்குழு கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனால் பொதுச் செயலாளராகத் துரைமுருகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியானது. துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதால் காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வேட்பமனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில் இன்று காலை பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்மனுத் தாக்கல் செய்தார். பிற்பகலில் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

துரைமுருகன், டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பகிர்