அமைச்சர் செல்லூர் ராஜூ அளிக்கும் பேட்டிகள் அனைத்தும் சர்ச்சையில் சிக்குவதால் தேர்தல் முடியும் வரை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்குமாறு மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக மதுரையில் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் பிரஸ் மீட்டை முற்றிலும் தவிர்த்து, தாம் கூற நினைப்பதை அறிக்கையாக கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

செல்லூர் ராஜுவின் கலகல பேட்டிகளும் அவர் கூறும் கருத்துக்களும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வைரலாவது வழக்கம். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை பொறுத்தவரை மனதில் தோன்றுவதை ஒளிவுமறைவின்றி செய்தியாளர்களிடம் பேசக் கூடியவர். அவ்வாறு அவர் பேசுவது அவருக்கே பல நேரங்களில் சிக்கலை உருவாக்கிவிடும். பிறகு அதற்கு ஒரு சமாளிப்பு பேட்டி கொடுத்து மதுரை செய்தியாளர்களை எப்போதும் கலகலவென வைத்துக்கொள்வார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் செல்லூர் ராஜூ பேசுகிறார் என்றால் அதில் கன்டென்டிற்கு குறைவிருக்காது.

தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வோம் என அவர் யதார்த்தமாக கூறிய கருத்து அதிமுகவில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. முதல்வர் வேட்பாளர் பற்றி யாரும் வாய் திறக்காத நிலையில் அது குறித்து அவர் பேட்டியளித்தது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையேயான பனிப்போரை அதிகரிக்க வைத்தது. அமைச்சர்கள் அங்கும் இங்கும் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு ஒரு வழியாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாஸ்க் அணியாதது பற்றி செய்தியாளர்கள் கேட்க, கொரோனாவுடன் வாழபழகிக் கொண்டதாக அவர் பதில் அளிக்க அது வேறுவடிவில் செய்தியாக வெளிவந்தது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட ஆட்சி மேலிடம், சிறிது காலம் பேசாமல் இருங்கள் தேர்தல் வருவதை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதையடுத்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பை முடிந்தவரை தவிர்க்கத் தொடங்கியுள்ளார் அமைச்சர் செல்லூர். ஒரு சில இடங்களில் பேட்டிக்கொடுக்குமாறு செய்தியாளர்கள் வற்புறுத்தினால், அவரது கருத்தை அறிக்கையாக கொடுத்துவிட்டுச் செல்கிறார் செல்லூர் ராஜூ. விரைவில் செய்தியாளர்களுடன் எக்ஸ்ட்றா சென்சரி பர்சப்ஷன், டெலிபதி மூலம் தனது மொக்கை ஜோக்குகளை செல்லூர் ராஜூ பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்