அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் பாஸ் என அதிமுக அரசு போட்ட உத்தரவு அதிகாரிகள் தரப்புக்கு அமைச்சர்கள் தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலாக மாறியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பையே வெளியிட மனமில்லாமலிருந்த முதல்வர் பழனிசாமிக்குக் கல்லூரி மாணவர்கள் நலனில் என்ன திடீர் அக்கரை வந்தது என்பதே இங்கு பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
முதல்வர் பழனிசாமியின் அரியர் தேர்வு தொடர்பான உத்தரவு, அனைத்து தரப்பு கல்லூரி மாணவர்களையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாகக் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அரியர் தேர்வுகளை எழுதி வந்த மாணவர்கள் எல்லோரும் முதல்வரை ஹிரோவாகவே பார்க்கத் தொடங்கினர். அரியர் உத்தரவில் தொடங்கி இப்போதுவரை அதிமுக செய்த நல்ல விஷயங்கள் என்ன, ஜெயலலிதா, எம்ஜிஆர் என்னலாம் செய்தார்கள் என்ற பேச்சுக்கள் மாணவர்கள் தரப்பில் அதிகளவில் காணப்படுகிறது.
இது நல்ல மதிப்பை அதிமுகவிற்குச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது உண்மைதான். ஆனால் அதிகார மையத்தில் அதிமுகவின் இந்த உத்தரவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அரியர் தேர்வுத் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவைத் தடை செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நிலையில், அரியர் தேர்வு உத்தரவு தொடர்பாக மாநில அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, “அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு, பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை ஏற்க முடியாது என இமெயில் அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்தார். சூரப்பாவின் இந்த கருத்து அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சூரப்பாவின் கருத்துக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் உயர் கல்வி அமைச்சர்க் கே பி அன்பழகன், “சூரப்பா சொல்வது அவருடைய கருத்து, அரியர் தேர்வு உத்தரவு தொடர்பாகத் தனது கருத்து எனக் கூறாமல் அதை ஏஐசிடிஇ கருத்து எனத் திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது” என வெளிப்படையாகப் பேசினார். இந்த சண்டைக்கு இடையே தேர்வில் பாஸ் எனச் சந்தோசத்திலிருந்த மாணவர்கள் அனைவரும் கதிகலங்கி நிற்கின்றனர்.
மாணவர்களிடம் இதுகுறித்து, “எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம், அரியர் தேர்வில் பாஸ் என உத்தரவு போட்டுவிட்டு அது செல்லாது எனத் தெரியவந்தால் அதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கும்” எனக் கருத்து கூறுகின்றனர். அதிமுகவின் இந்த அரியர் தேர்வு தொடர்பான உத்தரவு எதிர் வரும் சட்டப் பேரவை தேர்தல் காரணமாகவே கொண்டு வரப்பட்டது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர் பலரையும் கவரும் என அதிமுக வட்டாரங்கள் கணித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சூழலில் ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ர்புத்தே கருத்து ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரி மாணவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனில், “தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெறுவதை அனுமதிக்க முடியாது. அப்படித் தேர்வுகள் ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் முடிவு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டி சூரப்பாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள் மாணவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே அதிமுகவின் அரசியல் காரணங்களுக்காக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை எதிர்க்கத் துணிந்த விவகாரம் அக்கட்சி மீதான மதிப்பைக் குறைத்துள்ளது. அதேவேளை பெரும்பாலான மாணவர்கள் தரப்பிலிருந்து சூரப்பாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அரியர் அரசியல் தேர்தர் வரை தொடர்ந்தால், நிச்சயம் அதிமுகவுக்குச் சாதகமாகக் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் பிரியும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.