சென்னை: நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாடு முழுக்க நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வுகள் நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு நடக்கும் முன்பே தமிழகத்தில் இன்று மூன்று பேர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார். உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் பதிவு செய்த ஆடியோவும் வெளியாகி உள்ளது.

நான் சோர்ந்து போய்விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாது. எனக்கு தைரியம் இல்லை. அதனால் தற்கொலை செய்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். அதனால் உங்களை விட்டு செல்கிறேன் என்று கூறிவிட்டு, ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆதித்யா கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. நாளை தேர்வு நடக்க உள்ள நிலையில் இன்று இவர் தற்கொலை செய்து கொண்டார். இவரும் சோகமான கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று நேரம் முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சம் காரணமாக தூக்கிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இதனால் ஒரே நாளில் மூன்று பேரும், ஒரே வாரத்தில் 4 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், எங்கே மருத்துவர் ஆக முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாகவும் இவர்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்கி வந்த தமிழகத்தின் மாணவர்கள் தற்போது நீட்டை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் காரணமாக அனிதாதான் முதன் முதலில் தற்கொலை செய்து கொண்டார். தற்போது ஆதித்யா வரை மொத்தம் 8 மாணவர்கள் வரை நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்கத்தில் நீட்டிற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் ரவி சேகர். இவரது மகள் செளமியா வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு தேர்வெழுத இருந்தார். இந்த நிலையில் மாணவி அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டு மயக்கம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அவரது பெற்றோர் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆற்காடு மேல்விஷாரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் தற்கொலை முயற்சி தொடர்பாக மாணவி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் நீட் தேர்வில் தோல்வி ஏற்பட்டால் தன்னுடைய பெற்றோர் மன வேதனைக்கு ஆளாவர்கள் .எனவேதான் தற்கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற நீட் தற்கொலைகள் நிகழாமல் இருக்க, விலையில்லா அரிசி, மிக்சி கிரைண்டர், முககவசம், சானிடைசருடன் ரேசன் கார்டுக்கு இரண்டு மெடிக்கல் சீட் கொடுத்துவிடலாம் என மத்திய அரசிடம் கேட்கப்போவதாக தமிழக அரசு கப்சா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி, மிக்சி கிரைண்டர் போன்றவற்றை செகண்ட் ஹேண்டில் விற்றது போல் விற்றுக் காசாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் கப்சா குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.