திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சதி விசாரிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அம்மா என்பதையும், விசாரணை என்பதையும் ஆட்சியாளர்கள் அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள் என சாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தர்மயுத்தம்” நடத்தி, துணை முதலமைச்சர் பதவி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் இப்போது, “தர்ம யுத்தம்-2” என்று மிரட்டினார். ஆனால் ஜெயலலிதா அம்மையார் மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் “சம்மனை” நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களினாலும்,- ஒரே வாரத்தில் திரு பழனிசாமிக்கு “முதலமைச்சர் வேட்பாளர்” என்று ஆசி வழங்கி, கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, இரண்டாவது தர்ம யுத்தத்தையும் முடித்துக் கொண்டு, அமைதியாகி விட்டார் பன்னீர்செல்வம்.

மூச்சுக்கு முன்னூறு தடவை “அம்மாவின் ஆட்சி” என்று குறிப்பிடப் படுபவரின் மரணத்தில் “சதி” குற்றச்சாட்டு பற்றி இன்னும் விசாரித்து முடிக்கவில்லை. விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையமும் 3 வருடங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டு விட்டது. இந்நிலையில்தான் விசாரணை ஆணையத்தின் நீதிபதி திரு. ஆறுமுகசாமி அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது குற்றம் சாட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்.

“அம்மாவின் அரசு” என்று, ஊரை ஏமாற்றுவதற்காக அடிக்கடி கூறி – கூட்டு சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக, இந்த விசாரணைக் கமிஷனை பெயருக்காக அமைத்து- திரு. பழனிசாமியும், திரு பன்னீர்செல்வமும் பதவி சுகத்தை முன்னிறுத்தி – தங்கள் தலைவியின், ஒரு முதலமைச்சரின் மரணத்தில் உள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்தி வருகிறார்கள்.
“அம்மா” என்பதையும், “விசாரணை” என்பதையும், அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள்.

தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும்- நான் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் கூறியபடி – மறைந்த ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் உள்ள சதியை விசாரித்து – மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.

பகிர்