ரஜினி பெயரில் வெளியான லெட்டர் என்ன சொல்கிறது? அதன் பின்னணி காரணம் என்ன? அப்படி என்றால், இதற்கு முன்பு வெளியான தகவல்கள் எல்லாம் உண்மைதானா? என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் இப்போது ஏற்பட்டுள்ளது!
நேற்று ரஜினி பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு லெட்டர் வலம் வந்தது.. நிச்சயம் அதை ரஜினிகாந்த் வெளியிட்டது போலவே இல்லை.. காரணம் ரஜினி தரப்பில் யாருமே அதற்கு கமெண்ட் கொடுக்கவும் இல்லை.
ரஜினி பெயரில் வந்த அந்த லெட்டரில் இருந்த சுருக்கம் இதுதான்:
“மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. சிங்கப்பூரில் 2011-ம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு சிகிச்சையும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு “தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.
அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.
நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்பது உட்பட இன்னும் பல விஷயங்கள் அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தன.
இப்படி ஒரு அறிவிப்பு போலியானது என்றும், ரஜினி பெயரில் யாரோ வெளியிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.. ரஜினி நிச்சயம் இதை வெளியிடவில்லை என்பது உறுதியானது.. இதை பற்றி ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: “யார் வெளியிட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், அந்த லெட்டரில் சொல்லப்பட்டிருப்பது எல்லாமே உண்மைதான்.. ஏனென்றால், இருவித பிரச்சனை அவருக்கு இருக்கிறது.
கட்சியை ஆரம்பித்து விடக்கூடாது என்று திமுக தரப்பில் மறைமுக அழுத்தம் தருவதாக சொல்லப்பட்டது.. அது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாக இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்.. யாருக்கும் பயப்படவும் மாட்டார்… அப்படி இருக்கும்போது, இந்த அறிக்கையை யாரோ எதிர்தரப்பில் இருந்து வேண்டுமென்றே கசிய விட்டுள்ளனர்.. அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை செய்திருக்கலாம்.
உண்மையிலேயே, அவரது அரசியல் வருகை லேட் ஆவதற்கு இந்த கொரோனாதான் முக்கியமான காரணம்.. 2 ஆபரேஷன் செய்துள்ளதால், உடம்பு ஒத்துழைக்க வேண்டும் என்ற அக்கறை நலன்விரும்பிகளுக்கு இருக்கவே செய்கிறது… எங்கள் எண்ணமும் அதேதான்.. இந்த கொரோனா முடிந்து அவர் வந்தால்கூட போதும். ஆனால் அவருக்கு நிறைய வில் பவர் இருக்கு.. நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க.. கண்டிப்பா மக்களுக்காக அவர் கட்சியை ஆரம்பித்துவிடுவார்.. அவராகவே அதை வாய் திறந்து சொல்வார்.. அதுவரை இது மாதிரி ஆயிரம் லெட்டர் வரும்.. எதையும் நம்பாதீங்க! என்றனர்.
இந்தக் கடிதத்தை எழுதியது யார் என்று ரஜினியின் மக்கள் மன்ற மண்சோறு நிர்வாகிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்பு எச்.ராஜா ஹைகோர்ட்டாவது ம**ராவது என்று கூறிவிட்டு பின்னர் தனது அட்மின் பெயரில் பழியைப் போட்டது போல் ரஜினியும் லெட்டரை வெளியிட்டுவிட்டு, அட்மின் மீது பழி போடுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அந்த ரஜினி மன்ற ‘மண்சோறு’ நிர்வாகி.