தேர்தல் பிரசாரம் செய்த என்னை கைது செய்த அரசு சென்னையில் தொண்டர்களை பார்த்து நடந்து சென்று கை அசைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் கைது செய்யவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தொடங்கி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
உதயநிதி நேற்று 2-வது நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நாகை அக்கரைப்பேட்டையில் உதயநிதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் 9 மணிநேரத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: மக்களின் எழுச்சியையும், வரவேற்பையும் தாங்க முடியாமல் அதிமுக அரசு கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வன்முறை நடக்க கூடாது என்பதற்காக நான் கைதானேன். மீதமுள்ள நான்கு நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு செல்வேன் என்று காவல்துறையிடம் சொல்லியிருக்கிறேன்
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி எனக் கூறியிருப்பது திமுகவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக அரசு செய்த ஊழல் பட்டியல் பாஜகவிடம் உள்ளதால் தான் அனைவரும் அடிமையாக உள்ளனர். எங்கள் பிரச்சாரத்திற்கு காவல்துறை தடை விதித்தால் நீதி மன்றம் செல்வோம்.
சென்னையில் அமித்ஷாவும் சாலையில் நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அவரை ஏன் அதிமுக அரசு கைது செய்யவில்லை? எல் போர்டு முருகனுடைய அட்டை வேல் யாத்திரைக்கு அனுமதி எனக்கு இல்லையா? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் காட்டுக் கூச்சலில் கூறினார்.