ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வரப்போவதாக கூறினார் ரஜினிகாந்த், தம்முடையது ஆன்மீக அரசியல் என்றும் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் வருகைக்காக மூன்று ஆண்டு காலம் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரஜினிகாந்த், தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் என புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.
ரஜினியின் அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்துகிறார். இதுவரை 47,520 பூத் கமிட்டிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்க விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினி உடனான ஆலோசனைக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை என்றார்.
முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது. கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசித்து வருகிறோம்.
கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் ரஜினிகாந்த் அறிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உட்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார். மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பார்.
ரஜினி கட்சியை தொடங்கியவுடன் பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள். திமுக, அதிமுகவின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதால் பாதிப்பில்லை என அரசியல் கட்சிகள் கூறுவதே அவர்களுக்கு பாதிப்பு இருப்பதை காட்டுகிறது.
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஜினியின் அரசியல் அன்புசார்ந்த ஆன்மீக அரசியல், மற்றவர்களை விமர்சிக்கும் அரசியல் அல்ல. ஆன்மீக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி.
ரஜினி கட்சி தொடங்கி தமிழக அரசியலுக்கு வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும் என்று கூறிய தமிழருவி மணியன், ரஜினி கட்சி தொடங்கியவுடன் அதனுடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழருவி மணியனைக் கழற்றிவிட்டு எல்லாம் மேல இருப்பவன் பார்த்துப்பான் (எமேஇப) என்ற கட்சியை பாஜக ஆதரவுடன் அமித்ஷா கைச்செலவில் ரஜினி ஆரம்பிக்க இருப்பதாக மக்கள் மன்ற ர’கசிய’ செய்திக் குறிப்பு ஒன்று கப்சாவாக உலாவந்து கொண்டிருக்கிறது. ஆண்டை குறிப்பிடாமலேயே டிசம்பர் 31 ஜனவரி 1 என்று அவிழ்த்துவிட்டு அண்ணாத்த பட புரமோஷனை முந்தா நேத்து தான் ஆரம்பித்தார் ரஜினி. அண்ணாத்த ரிலீஸ் ஆன உடன், தனக்கு பெயர் பெற்றுத்தந்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதில் வரும் ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாடலை ‘அஜக்கு இன்னா அஜக்கு தான்.. பஜக்கு (பாஜக) இன்னா பஜக்கு தான்’ என ரீமிக்ஸ் செய்து சிங்கிளை சிங்கம் போல், கட்சி தொடங்கும் நாளில் (எந்த ஆண்டு என்று குறிப்பிடவில்லை) யூட்யூபில் வெளியிடுவார் எனத் தெரிகிறது.