இன்று காலை திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மரு…

சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய அளவுக்கு மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மாலையில் அப்பல்லோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அண்ணாத்த என்ற பெயரில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்தப் பட சூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.

ஆனால் சூட்டிங் குழுவைச் சேர்ந்த சுமார் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அவருக்கு நெகட்டிவ் என வந்தது.

அதேநேரம், இன்று காலை திடீரென ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. ஆனால் ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அசதி ஏற்பட்டுள்ளது. இது இரண்டை தவிர பிற அனைத்தும் நார்மலாக இருக்கிறது என்று அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டது.

இது பற்றி தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டியது இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் வைத்திருந்து பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

இதனிடையே, இன்று மாலை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு சீராக்குவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு அவர் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியது இருக்கும். நாளை கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா உடனிருந்து கவனித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

பகிர்