பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் போது குறைந்தபட்சம் பத்து அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேரணியாக நடந்து வர வேண்டும் என்று சசிகலா வியூகம் வகுத்து காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வருவது போல் இருக்க கூடாது என்பதற்காகவே சசிகலா உடல் நலம் குன்றியது போல் நாடகம் போட்டதாக சில பேச்சுகள் உண்டு. சிறையில் இருந்து தமிழகம் திரும்பினால் அது தன்னுடைய இமேஜை பாதிக்கும் என்பதால் தான் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்னர் சசிகலா மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆனதாகவும் கூறப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனையில் இருந்தபடி சில அரசியல் காய் நகர்த்தல்களுக்கு சசிகலா திட்டமிட்டதாகவும் ரிலீஸ் ஆகும் போது கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்ட வேண்டும் என்று அவர் நினைத்ததாகவும் கூட சொல்லப்பட்ட துண்டு

ஆனால் சசிகலா சிறைக்காவலில் மருத்துவமனையில் இருந்த போது அவரால் அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் தான் ரிலீசுக்கு பிறகும் கூட அதே அரசு மருத்துவமனையில் சசிகலா இருந்ததாக சொல்கிறார்கள். இந்த முறை சிறைக் காவல் இல்லாத நிலையிலும் அரசியல் ரீதியாக எவ்வித தாக்கத்தையும் சசிகலாவால் ஏற்படுத்த முடியவில்லை. தன்னை காண அதிமுக முக்கிய அமைச்சர்கள் தொடங்கி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரை பலரும் படை எடுப்பார்கள் என்றும் சசிகலா காத்திருந்தார். ஆனால் தினகரன் நடத்தும் அமமுக கட்சியினர் கூட சசிகலாவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளுமாறு நிர்வாகம் நெருக்கடி கொடுத்த நிலையில், வேறு வழியே இல்லாமல் அங்கிருந்து சசிகலா வெளியேறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போதும் கூட சில நூறு கட்சிக்காரர்கள் மட்டுமே அங்கிருந்தனர். இதனால் நேரடியாக தமிழகம் திரும்ப சசிகலா விரும்பவில்லை. எனவே தான் பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டுக்கு சசிகலா நேரடியாக திரும்பினார். அங்கிருந்தபடி அதிமுகவில் தன்னால் வளர்ந்தவர்களை தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருவதாக கூறுகிறார்கள்.

சசிகலா தன்னிடம் கட்சிக்காரர்கள் தாங்களாகவே வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடக்காத காரணத்தினால் முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு சசிகலாவே நலம் விசாரிப்பதாக கூறுகிறார்கள். இதற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை என்கிறார்கள். அதே சமயம் சசிகலா தான் சென்னை திரும்பும் போது குறைந்தபட்சம் தன்னுடன் 10 அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் ஊர்வலமாக நடந்து வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் சென்னை எல்லையில் தனக்கு அதிமுகவினர் திரண்டு வரவேற்பளிக்கவும் ஏற்பாடுகளை செய்யுமாறு சசிகலா கூறியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இது குறித்து முதலிலேயே மோப்பம் பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். அதோடு அமைச்சர்கள் சிலர் நேரடியாகவே எடப்பாடியை தொடர்புகொண்டு சசிகலா தங்களிடம் பேசிய தகவல்களை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து சசிகலாவை சமாளிப்பதற்கான வியூகத்துடன் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகவும் கூறுகிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கடந்த மாதம் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. ஓபிஎஸ் முன்னிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார். ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா கண்ட அதே நாளில்தான் சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். ஜெயலலிதாவின் பிறந்தாள் வருகிற 24ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அவசர அவசரமாக நினைவிடம் திறக்கப்பட்டது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மைய பணிகள் நிறைவடையவில்லை. இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால், ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக முதல்வர் பழனிசாமியின் கையில் இருக்கும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, சிறையில் இருந்து விடுதலையாகி, மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவிலேயே தங்கியிருக்கிறார். ஒரு வாரம் கழித்து அவர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்பட்டது. அதன்படி, இந்த வாரம் இறுதியில் சசிகலா, சென்னை வந்தால் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்று சொல்லபடும் நிலையில், அவரது நினைவிடம் மூடப்பட்டுள்ளது.

சிறை செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்த சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியிலும் அமர வைத்து விட்டு சென்றார். ஆனால், ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். ஆனால், சசிகலா விடுதலையானதும், அவரது அபிமானிகளான ரத்தத்தின் ரத்தங்கள் திரளாக சென்று விடுவர் என்று கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் அதிரடியான மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் அதிமுகவில் ஒலிக்க தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் சென்னை வரும் சசிகலா நேராக தனது சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு, நேராக ஜெயலலிதா நினைவிடம் சென்றால் அது தனக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்று முதல்வர் கருதும் காரணத்தினால் அவசரகதியில் சாக்குபோக்குகளை சொல்லி நினைவிடம் மூடப்பட்டுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பகிர்