சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆகியுள்ள அதிமுக முன்னாள் பொது செயலாளர் சசிகலா, இன்று சென்னை வருவதை ஒட்டி ஜெயலலிதா நினைவிடம், போயஸ் கார்டன் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் இரண்டு முறை சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு எதிராக, தமிழக காவல் துறை தலைவரிடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர். அதேநேரம், சசிகலாவின் ஆதரவாளர்கள் பெங்களூரு முதல் சென்னை வரை பல இடங்களில் பதாகைகள் வைத்துள்ளனர்.

சுமார் 50 இடங்களில் வி.கே.சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர் கூறுகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்வில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சசிகலா அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் நிகழாது என தெரிவித்துள்ளார்.

“அதிமுக மிகப்பெரிய இயக்கம். கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது. அவரது வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை,”என ஊடகங்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில், அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது தொடர்பாக பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆட்சி, அதிகாரத்தை வைத்துக் கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.

சசிகலாவின் வருகையால் அதிமுகவினர் பதற்றமடைந்துள்ளனரா என மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணனிடம் கேட்டோம்.
”அதிமுக அலுவலகத்தை சுற்றியும் காவல்துறையினர் இருக்கிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இத்தகைய ஏற்பாடு தேவையா எனத் தெரியவில்லை. கட்சியின் முழு பொறுப்பையும் உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றிருக்கின்றனர். கட்சியின் சின்னமும் இவர்களுக்குத்தான் என தீர்ப்பு இருக்கிறது. சசிகலா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இதுபோல தங்களுக்குச் சாதகமான பல வாய்ப்புகள் இருந்தபோதும் அதிமுகவில் இத்தகைய சலசலப்பு ஏற்பட்டுள்ளது வியக்கவைக்கிறது,” என்கிறார்.

மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளது என்பதால், சசிகலா பற்றி வெளிப்படையாக விமர்சிக்க முடியாத நிலையிலும் சிலர் இருக்கிறார்கள் என்கிறார் ராதாகிருஷ்ணன். தற்போது எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களாக இருக்கும் பலருக்கும் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், வி.கே.சசிகலா வருகை அதிமுகவினர் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதி. ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் பாதுகாப்பு பற்றி டிஜிபியிடம் மனுகொடுக்கிறார்கள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறார்கள் என்பதெல்லாம் வியப்பைத் தருகிறது,” என்கிறார் அவர்.

பகிர்