கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள் என டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழல் போல வலம் வந்த சசிகலா 4 ஆண்டு கால சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்புகின்றார். சென்னை மாநகர எல்லையில் இருந்து சசிகலாவிற்கு 32 இடங்களில் அமமுக தொண்டர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ஓய்வெடுக்கும் சொகுசு விடுதிக்கு முன்பு டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா-வை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டார்களே என வருத்துமாக உள்ளது.

ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்ற அச்சம் அமமுகவினருக்கு மட்டும் அல்ல. பொதுமக்களுக்கும் உள்ளது. காவல் துறை அதிகாரிகள் நடுநிலையாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.கட்டுப்பாடுகளுடன் சசிகலாவை தொண்டர்கள் வரவேற்பார்கள். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் இடையே யார் பேசுவது என பேசிக்கொண்டதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. காவல் துறையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் தொண்டர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே எந்த பிரச்னையும் வராது.

தொண்டர்களுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். சென்னை சென்றதும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல விரும்பினார் சசிகலா. அதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். சென்னை சென்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் வரும் சசிகலா அவரது கார் முகப்பில் அதிமுக கொடி கட்டியிருந்தார். ஏற்கனவே, சசிகலா இதுபோல கொடியை பயன்படுத்துவதற்கு எதிராக தமிழ்நாடு டிஜிபியிடம் அதிமுக மூத்த அமைச்சர்கள் மனு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக எல்லைக்குள் கார் வருவதற்கு முன்பாக, அதிமுக கட்சியை சேர்ந்த ஒருவரின் காரில் ஏறி கட்சி கொடியுடன் தமிழகத்துக்கு வந்தார். சசிகலா, அதிமுக கட்சிக்காரர் கட்சி கொடியை பயன்படுத்துவதால் அந்த காரில் சசிகலா வருவது சட்டப்படி தவறில்லை என்ற லாஜிக் படி அவர் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இருப்பினும் சசிகலா வழக்கறிஞரிடம் கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிமுக கொடியை பயன்படுத்தியது பற்றி நோட்டீஸ் அளித்துள்ளனர்.

எம்ஜிஆர் உருவாக்கியது இந்தநிலையில்தான் இன்று மதியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அவர் கூறியதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினார். அந்த கொடியை அதிமுகவினரை தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்த உரிமை கிடையாது. சம்பந்தம் இல்லாதவர்கள், குறிப்பாக, சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதம். எனவே, டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

அதிமுக கொடி சசிகலாவுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை காவல்துறையிடம் தெளிவாக எடுத்து வைத்து விட்டோம். இனிமேல் காவல்துறை அவர்கள் கடமையை செய்ய வேண்டும். 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தின்போது அதிமுக கொடியுடன் சிலர் பங்கேற்றது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் நீங்கள் அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். ஒரு உரிமைப் போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கட்சி கொடியுடன் பங்கேற்றது தவறு இல்லை.

கோரிக்கைக்காக கொடி ஏந்துவதற்கும், சசிகலா கொடியை பயன்படுத்துவதற்கும், வித்தியாசம் இல்லையா? உச்ச நீதிமன்றம் உத்தரவு அதிமுக கட்சி சின்னம் பற்றி, சட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு, சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கும், அதிமுக கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உத்தரவிட்டது. இந்தியாவின் உயர்ந்த நீதிமன்றம் உச்ச நீதிமன்றம். அந்த நீதிமன்றம் இவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளது.

வழக்கு போட்டால் போதுமா? தேர்தல் ஆணையமும், இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளர் மட்டும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் ஒதுக்கியுள்ளது. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் யார் வேண்டுமானாலும் வழக்கு போடலாம். நான் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஒருவர் வழக்கு போட்டதாலே அவருக்குச் சொந்தமாகி விடாது. ஒரு பள்ளிக்கூடம் எனக்கு சொந்தம் என்று ஒருவர் வழக்கு போட்டால் வழக்கு போட்டவர் உரிமையாளர் என்று ஆகிவிடுமா? இவர்கள் உரிமை கோர முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்து விட்டது. எனவே, கட்சிக்கும் கட்சி கொடிக்கும் சொந்தம் கொண்டாடக்கூடாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எட்டப்பன்கள் சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகி தனது காரை கொடுத்து கட்சி கொடியோடு வர வைத்துள்ளாரே, அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இல்லை. சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள். அப்படியான ஒரு எட்டப்பன்தான் கார் கொடுத்துள்ளவர் என்றார் ஜெயக்குமார். ஆட்சிக்கு எதிராக போட்டி மேலும், தமிழகத்தில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றபோது, இதே அதிமுக கொடியையும், அதிமுக சின்னத்தையும் எதிர்த்துதானே தினகரன் கட்சி போட்டியிட்டது.

ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியே கலைந்திருக்கும் வாய்ப்பு இருந்ததே. ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தாரே. இந்த கோஷ்டி தேர்தலில் மண்ணை கவ்வியதே. ஆட்சியை கலைக்க தேர்தலில் எதிர்த்து நின்றவர்கள், இப்போது எந்த உரிமையில் அதிமுக கொடியை பயன்படுத்துகிறார்கள்? சசிகலா ஒருபோதும் அதிமுகவில் சேர முடியாது – நாங்க எப்பவேணாலும் அங்க போய் சேர்ந்துக்குவோம் – இவ்வறு சீக்ரெட்டை உடைத்தார் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார்..

பகிர்