சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.19 ரூபாய், டீசல் லிட்டர் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91.45 ரூபாய் எனவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து , லிட்டர் 84.77 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89.29 ரூபாய் க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றய விலை 88.99 ரூபாய் ஆக இருந்தது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது டெல்லியின் விலை சற்று குறைவாக இருக்கிறது.

மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 95.75 ரூபாய் ஆக விற்பனையாகிறது, பர்பானி போன்ற சில மாவட்டங்களில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதற்கு முன்பு பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டது இல்லை. மகாராஷ்டிரா மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தா மாநிலத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது. இந்த விலைப் பட்டியல் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது இப்படியிருக்க நமது கப்சா நிருபரின் புலனாய்வில் பெட்ரோல் விலையை தாறுமாக உயர்த்திவிட்டு தேர்தல் சமயத்தில் முப்பது ரூபாயாக குறைத்து தமிழகத்தில் தாமரையை மலர வைக்க திட்டமிட்டிருப்பதாக தெளிவாகிறது.

எடப்பாடி பழனிசாமியும் மனித பெட்ரோலான டாஸ்மாக் சரக்கு விலையை கணிசமாக குறைத்து குடிமகன்களின் ஓட்டுக்களை அள்ளி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற எத்தனிக்கிறார். வெற்றி நடைபோடும் தமிழகம் அதன்பிறகு வெற்றி தள்ளாட்டம் போடும் என எதிர்பார்க்கலாம்.

பகிர்