தி.மு.க.வின் நடவடிக்கை சரிதானா?

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தந்தி டிவி, நியூஸ் 18 டிவி, ஆதன் யு டியுப் சேனல், மூன்றாம் பார்வை யு டியுப் சேனல் ஆகியவற்றில் நான் பேசிய விசயங்களுள் ஒன்றை இங்கே பகிர்கிறேன்:

“கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களை அளிப்பதோடு, அக்கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என தி.மு.க. வற்புறுத்துவதாக தகவல்கள் வருகின்றன.

இது ஜனநாயகம் அல்ல.

இங்கே ஜனநாயகம் என்பது பல கட்சி இயங்கும் அமைப்புதான்.

கட்சிகள் இயங்க, தனி சின்னம்தான் அங்கீகாரம். அதை மறுப்பது கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சிக்கு அழகல்ல.

‘உதயசூரியன்தான் மக்களுக்கு தெரிந்த சின்னம்.. ஆகவே வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்’ என்பது சரியல்ல. மக்கள் அந்த அளவுக்கு விபரமில்லாதவர்கள் கிடையாது. புதிய சின்னமாக இருந்தாலும், தங்களுக்கு பிடிக்க கட்சி அல்லது வேட்பாளர் என்றால், புதிய சின்னத்தை மனதில்இறுத்தி வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள். கடந்த காலங்களிலும் இப்படி நடந்தது உண்டு.

‘இந்தியாவில் இந்துக்கள்தான் இருக்க வேண்டும். முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று இந்துத்துவவாதிகள் கூறுவதை பாசிசம் என கூறுகிறது தி.மு.க.

ஆனால், தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனது சின்னமே நிற்க வேண்டும் என்பதும் இப்படிப்பட்ட ஒன்றுதானே.

தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ… ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மையில் செயல்படும் எந்த கட்சியானாலும் தவறுதான்.

இவை, இடதுசாரி கட்சிகளிடம் ஜனநாயக பாடம் படிக்க வேண்டும்.

கேரளாவில் இடதுசாரிகள்.. குறிப்பாக சி.பி.எம். வலுவாக உள்ளது. அக்கட்சி கூட்டணியில் சிறிய கட்சிகளிடம், ‘எங்களது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என சிபிஎம் வற்புறுத்துவது இல்லை. ஒரு சுயேட்சை கூட இக்கூடணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும், ‘ வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்’ என்றன. ஆக எப்போதே எளிதாக கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்திருக்கலாம். யாருககு எத்தனை இடங்கள், எந்தத் தொகுதிகள் என்பதை முன்பே பேசி முடித்து இந்நேரம் பிரச்சாரத்துக்குச் சென்றிருக்கலாம்.

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி கட்சிகளை நிர்ப்பந்தப்படுத்துவது போல திமுக செயல்படுகிறது.

ஒருவேளை வரும் தேர்தலில் தான் தனித்து நின்றாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என தி.மு.க. நினைக்கிறதோ என்னவோ?

ஆனால் எதார்த்தம் அது அல்ல. எடப்பாடி பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றபோது, அவர் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லை. ‘ விரைவில் இவர் பதவியிழப்பார்.. அடுத்த முதல்வர் தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின்தான்’ என்ற எண்ணமே பரவலாக இருந்தது.

ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணம் மாறியிருக்கிறது.

அ.தி.மு.க. மீது எதிர்ப்பு வருவதற்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு எதிர்ப்பு மக்களிடையே தற்போது இருக்கிறதா என்பது பெரும் கேள்வி.

தற்போது இரு கட்சிகளும் கடும் போட்டிக்கிடையேதான் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன.

குறைவான வாக்குகளில் பல தொகுதிகலை கடந்த தேர்தலில் திமுக இழந்தது.

தவிர தற்போது மக்களிடையே எழுந்திருக்கும், பாஜக எதிர்ப்புக்கு தி.மு.க.வை விட அதன் கூட்டணி கட்சிகளே அதிகமான காரணம். அதே போல தேர்தலில் போட்டியிடாத திராவிட இயக்கங்களும் காரணம். அவற்றின் பிரச்சாரங்கள் அப்படி இருந்தன.

இதையெல்லாம் மனதில் வைத்து, கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க. நடந்துகொள்ள வேண்டும். அதுவே அக்கட்சிக்கு சாதகமான முடிவைத் தரும்.

(விவாதத்தில் இதைக் குறிப்பிடும்போது தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன், ‘2016ல் அ.தி.மு.க.வும் இப்படித்தானே செய்தது.. அதையும் விமர்சிப்பீர்களா?’ என்றார்.

அதற்கு நான், ‘தி.மு.க.வுக்கு ஜெயலலிதாதான் வழிகாட்டியா? தவிர தி.மு.க. செய்தாலும் அ.தி.முக. செய்தாலும் தவறு தவறுதான். குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி, திமுக கூட்டணி பற்றியது என்பதால் அக்கட்சியை குறிப்பிட்டேன். மற்றபடி எந்த கட்சியையும் விமர்சிப்பதில் எனக்கு தடையில்லை’ என்றேன்.)

  • டி.வி.சோமு மூத்த பத்திரிகையாளர்
பகிர்