கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெடுத்த அத்தனை பணிகளையும் நிறைவேற்றி இந்தியாவின் முதல் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது…

பாஜகவின் தேசிய தலைமை மற்றும் தமிழக தலைமை என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது. நான் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தபோது எப்படி செயல்பட்டேன் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும்.

எனவே இந்தமுறை மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பொதுமக்கள் எனக்கு அளிப்பார்கள். கடந்த தேர்தலில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டதை நன்கு அறிந்து இந்த முறை நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நான் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த போது, பணிகள் பாதியில் நின்று போகக் கூடாது என்பதற்காக அப்போதைய எம்பி வசந்தகுமாருக்கு முழு ஒத்துழைப்பை அளித்தேன்.

இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் நான் முன்னெடுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்படும். பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் கொண்டுவரப் போவதில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

பகிர்