தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 24 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் பேச முடியவில்லை. அதனால், வழி நெடுக திரண்டிருந்த தொண்டர்களையும் பொதுமக்களையும் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறே பார்த்து கையசைத்தும், இருகைகளையும் உயர்த்தி கும்பிட்டபடியும் பிரச்சாரம் செய்தார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கும்மிடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் கே.எம். டில்லியை ஆதரித்தும், பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொன் ராஜாவை உள்ளிட்டோரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் மிகுந்த உற்காசகம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக, சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரபு, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபு உள்ளிட்டோரை ஆதரித்து, கை அசைத்தும், கட்டை விரலை உயர்த்தி காட்டியும், கையெடுத்து கும்பிட்டும் பிரசாரம் செய்தார்.
விஜயகாந்தின் உதவியாளர் அவரின் கைகளை அவ்வப்போது பிடித்து, விஜயகாந்த் கைகளை உயர்த்துவதற்கும், திரும்பி நிற்பதற்கும் உதவி செய்தார். விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தாலும், அவரின் உடல்நிலையைப் பார்த்து பலரும் வேதனை அடைந்தனர். சிலர் கண்கலங்கினர். ‘எப்படி இருந்த கேப்டன் விஜயகாந்த் இப்படி ஆயிட்டாரே’ என்று அருகில் இருந்த பிற தொண்டர்களிடம் கூறியபடி சிலர் கண்கலங்கியதைப் பார்க்க முடிந்தது.
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தமிழக சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மொடாக் குடியராக இருந்த விஜயகாந்த், பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரலை இழந்தார், பின்னர் வெளிநாடு சென்று பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு நடமாடும் நிலைக்கு திரும்பினார். அவரை பொம்மை போல் வைத்து குடும்பத்தினர் ஆட்சியை பிடிக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது.

பகிர்