தாதா சாகேப் பால்கே விருது பெற்று இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் எல்லோரும் வரிசையாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.. அரசியல் பாகுபாடு இன்றி பலரும் ரஜினியை வாழ்த்திவிட்டனர்.. இந்த வேகம்தான் கொஞ்சம் இடிக்கிறது! இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு மூலம் தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது .51-வது தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு இந்த விருது கிடைத்தவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி முதல் ஆளாக அவருக்கு போன் செய்தே வாழ்த்து தெரிவித்துவிட்டார். உங்களுக்கு விருது வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி, நீங்கள் சினிமாவில் செய்த வாழ்நாள் சாதனைக்காக இந்த உயரிய விருதை பெறுகிறீர்கள் என்று முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்த நொடியே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் போன் செய்து வாழ்த்திவிட்டார். பெருமை உங்களுக்கு விருது கொடுக்கப்பட்டது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கிறது என்று கூறி துணை முதல்வர் வாழ்த்து சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம் பிரதமர் மோடி ஒருபடி மேலே போய்., தலைவா என்றே கூறி ரஜினிகாந்தை வாழ்த்திவிட்டார் .. பல தலைமுறையாக கடின உழைப்பு, வித்தியாசமான வேடங்கள் மூலம் ரஜினி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
தலைவாவிற்கு இந்த விருது கொடுக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி டிவிட் செய்து பாராட்டி உள்ளார். இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.
திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்., என்று கமல்ஹாசனும் பாராட்டி உள்ளார். இப்படி அரசியல் தலைவர்கள் ரஜினியை பாராட்ட இன்னொரு பக்கமும் திமுக தலைவர் ஸ்டாலினும் வேக வேகமாக ரஜினியை பாராட்டி உள்ளார்.
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபோக பல அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு நேரடியாக போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூட ரஜினியை வாழ்த்திவிட்டனர். வெறும் 1 மணி நேரத்தில் சொல்லி வைத்தார் போல ரஜினிக்கு அடுத்தடுத்து வாழ்த்துக்கள் பறந்து உள்ளது. தேர்தல் நேரத்தில் எல்லோரும் இப்படி ஒன்றாக வாழ்த்துவதுதான் சந்தேகம் தருகிறது. ரஜினி ஆனால் ரஜினியோ இதுவரை எதற்கும் ரியாக்ட் செய்யவில்லை.
ரஜினி தங்களுக்குதான் க்ளோஸ் என்பதை போல காட்டிக்கொள்ள கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தேர்தல் நேரத்தில் முயற்சி செய்கிறது. ரஜினி இனிமேல் வாய்ஸ் கொடுத்து தேர்தல் நேரத்தில் எதுவும் மாற போவது இல்லை. ரஜினி இனிமேல் பேசி, அதன் மூலம் வாக்குகள் ஸ்விங் ஆக போவது இல்லை. ஆனாலும் எப்படியாவது ரஜினியை தங்களுக்கு ஆதரவானவராக காட்டிக்கொள்ள எல்லா கட்சிகளும் முயற்சி செய்கின்றன. ஆனால் ரஜினியோ இதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று இதுவரை எந்த டிவிட்டும் செய்யாமல், படு சைலண்டாக இருக்கிறார்!
மண்சோறு தின்று அலகு குத்தி காவடி எடுத்து முதுகில் கொக்கி குத்தி தேர் இழுத்த ரசிகனுக்கு ஒரு பன் கூட வாங்கித் தராமல் முட்டாளாக்கி ஏமாற்றிய ரஜினிக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் இந்த பால்கே விருது என்ற பாய்சன் பாயாசத்தை அளித்திருப்பது மிகப் பொருத்தம் என கப்சா நிருபர் அங்கலாய்த்தார்.