சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த சிலர், அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர். பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் பெருவாரியான இடங்களில் வென்றுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, இப்போது ஆட்சியை இழந்துள்ளது. இந்த சூழலில் சென்னையில் சிலர் அம்மா உணவத்திற்கு புகுந்த சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து போட்டு அங்கிருந்தவர்களை மிரட்டினர்.

சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலை செய்தவர்கள் திமுகவினர் தான் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக ஆட்சி மாறும் போது அவர்களின் பெயர்களில் இருக்கும் நலத்திட்ட உதவிகள் அப்படியே பெயர் மாற்றம் அடைவது இந்தியா முழுவதும் இயல்பாகி வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகம் பெயர் கலைஞர் உணவகம் என்று மாறுமா அல்லது அதே பெயரில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் ஊரடங்கு போடப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் ஏழை தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகம் பெரிதும் கைகொடுத்து வருகிறது. எனவே அந்த சேவை தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் புகுந்து மர்ம நபர்கள் பெயர்பலகையை உடைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிற்க நமது கப்சா நிருபரின் புலனாய்வில் சிக்கன் பிரியாணி என நினைத்து சாம்பார் சாத அண்டாவை சில திமுக தொண்டர்கள் தூக்கி சென்றதாகவும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு கால் மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். பெயர் குழப்பம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதால் இனி அம்மா உணவகங்கள் ‘மதெர்ஸ் மெஸ்’ என அழைக்கப்படும் என கப்சா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்