தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் மல்லுக்கட்டு இதையடுத்து அதிமுக சட்டசபை குழுத் தலைவர் அதாவது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை தீர்மானிக்க முடியாமல் அதிமுக அல்லாடியது.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக அலுவலக ஷட்டரை பூட்டிக்கொண்டு மல்யுத்தம்-குங்ஃபூ-குத்துவரிசை சண்டைகளை நிகழ்த்தி பெரும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மீண்டும் கூட்டப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில் அதிமுகவின் 65 எம்.எல்.ஏக்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றது அவரது தரப்பு. ஆனால் வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள்… எங்களுக்குதான் அதிக ஆதரவு உள்ளது என சொன்னது ஓபிஎஸ் தரப்பு. இந்த நிலையில்தான் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே 3 மணிநேரமாக கூட்டம் நீடித்தது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் கடுப்பாகிப் போன ஓபிஎஸ், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தராததால் அவரது ஆதரவாளர்கள் குமுறலுடன் உள்ளனர். இதனால் மீண்டும் ஒரு பிளவை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது. இவ்வாறு கப்சா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.