மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறிய நிலையில், கட்சிக்குள் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் முடிவில் அதன் தலைவர் கமல்ஹாசன் இறங்கி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில வாரங்களாக தலைவர்கள் பலர் வெளியேறி வருகிறார்கள். இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் முதலில் வெளியேறினார்கள். அப்போதே கட்சி உடைந்து விடுமோ என்ற அச்சம் நிலவியது

அதன்பின் மேலும் பல தலைவர்கள் வரிசையாக வெளியேறினார்கள். சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறி உள்ளனர். பின் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்மப்ரியா ஆகியோரும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இது போன்ற வெளியேற்றம் மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல நிர்வாகிகள் இப்படி வரிசையாக வெளியேறிய நிலையில், கட்சியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன. இணையத்தில் சிலர் கட்சி கலைக்கப்படும் என்று கூறி வந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை, கமல்ஹாசன் புதிய நிர்வாகிகள் சிலரிடம் பேசி வருகிறார்.

மற்ற கட்சியில் இருக்கும் சிலரிடமும் பேசிய வருகிறார் என்று தகவல்கள் வந்தன. முக்கியமாக அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் சிலரிடம் பேசிய வருகிறார். மக்கள் நீதி மய்யம் விரைவில் புதுப்பொலிவைப் பெறும் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிக் கொண்டு வந்தன.

ஆனால் ஒவ்வொரு முறையை இப்படி தகவல் வெளியான போதெல்லாம் கட்சியில் இருந்து மேலும் சில நிர்வாகிகள்தான் வெளியேறினார்கள். இதையடுத்து கமலும் இதை பற்றி பெரிதாக பொதுவில் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை.

போனவர்கள் போகட்டும்.. அவர்களுக்கு பெரிய பொறுப்புகளை வழங்கினேன், தோல்வி வந்தவுடன் சென்றுவிட்டார்கள் என்று நெருக்கமான சில நிர்வாகிகளிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் விரைவில் கட்சியை சீரமைக்கும் வகையில் மீட்டிங் ஒன்றை நடத்த இருக்கிறாராம்.

லாக்டவுன் முடிந்ததும் இந்த மீட்டிங் இருக்கும், கட்சியில் மீதம் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து கமல் பேசுவார். யாருக்கு எல்லாம் விலக விருப்பம் உள்ளதோ அவர்களை எல்லாம் உடனே விலகும்படி கோரிக்கை வைப்பார் என்கிறார்கள். அதன்பின்பே கட்சிக்குள் புதிய நிர்வாகிகள் கொண்டு வரப்படுவார்கள் என்கிறார்கள். இந்த முறை அரசியல் அனுபவம் உள்ளவர்களை கமல்ஹாசன் உள்ளே கொண்டு வர போகிறார் என்கிறார்கள்.

இதைத்தான் கமல்ஹாசன் தனது வீடியோவில் இன்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார். கமல் தனது வீடியோவில் கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி, விதை விழுந்தாலும் மண்ணை பற்றிவிட்டால் விரைவில் அது காடாகும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை நீங்கள் விரைவில் காண்பீர்கள். கொள்கையில் தெளிவும், பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது, என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் ஏற்பட போகும் மாற்றங்களை உருமாறிய மக்கள் நீதி மய்யம் என்று கமல் தெரிவித்துள்ளார். பழைய புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் என்று கூறி வெளிப்படையாக முன்னாள் நிர்வாகிகளை விமர்சனம் செய்துள்ளார். கட்சியில் பல நிர்வாகிகள் வெளியேறிய பின்பும் கமல் நம்பிக்கையாக பேசி உள்ளார்.

முக்கிய நிர்வாகிகள் கட்சியை பாதியில் விட்டுவிட்டு சென்ற பின்பும் கூட கமல்ஹாசன் தில்லாக பேசி இருக்கிறார். கட்சி புதிய மாற்றம் பெறும் என்றும் கூறியுள்ளார். உருமாறிய மக்கள் நீதி மய்யம் என்று கமல் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில்.. கட்சி எப்படிப்பட்ட புதிய மாற்றங்களை சந்திக்க போகிறது.. அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை கமல் எடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

‘உருமாறிய கொரோனாவுக்கு வயது ஒன்றரை தான், உருமாறப் போகிற மநீம விற்கு வயது அதிகம்.’ என்றார் கமல். இதற்கிடையே கொரோனாவை வீழ்த்த மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கூறி வருவதை கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் தவறாமல் கடைப்பிடிக்கிறது பாராட்டத்தக்கது என்று இந்திய மருத்துவக் கழகம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்