அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக அரசை பாராட்டி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தலைவர்கள் சிலரின் சமீபத்திய அறிக்கைகள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபின் முதல் நாளில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறது. திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிகாரிகள் என்று மொத்தமாக எல்லோரும் களமிறக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

கடந்த 20 நாட்களில் தமிழக அரசு மிக சிறப்பான பணிகளை செய்து 2ம் அலையை பெரிய அளவில் கட்டுப்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் அரசின் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டி வருகிறார்கள்.
முக்கியமாக தமிழக அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை அதிமுக எம்எல்ஏக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத்தொகை வட்டியோடு கொடுக்கப்படுவது சந்தோசம் அளிக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஒரு பக்கம் பாராட்டி உள்ளார்.

முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, ‘‘கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். ஒரு பக்கம் ஸ்டாலினுக்கு அடிக்கடி அறிக்கைகள் மூலம் கோரிக்கைகளை ஓ.பி.எஸ் வைத்து வருகிறார்.

ஒவ்வொருமுறையும் தனது கோரிக்கை ஏற்கப்படும் போதும், அல்லது அரசு நல்ல முடிவு எடுக்கும் போதும் அதை பாராட்டி வருகிறார். அது மட்டுமின்றி செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் கூட திமுக ஆட்சியை பாராட்டி வருகிறார்கள். இப்படி திடீரென அரசின் தடுப்பு நடவடிக்கைகளை ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார் பாராட்டுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

அரசிடம் இருந்து ஏதாவது அனுசரணை எதிர்பார்த்து இப்படி காய் நகர்த்துகிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகள், தவறுகளை ஒவ்வொன்றாக விசாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு இருக்கிறது. தற்போது பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யும் முடிவிலும் தமிழக அரசு இருக்கிறது.

இது போக பல்வேறு ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடு என்று பல விஷயங்களை விசாரிக்கும் பணியில் தமிழக அரசு இறங்கி உள்ள நிலையில், மொத்தமாக அதிமுக தலைவர்கள் பலர் திமுகவை பாராட்டி இப்படி அறிவாலயத்திற்கு “தூது” அனுப்புவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆட்சிக்கு அனுசரணையாக சென்றால், தப்பித்துவிடலாம் என்ற திட்டமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதலுக்கு இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் vs இபிஎஸ் என்ற மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பிற்கும் இடையில் அறிக்கை மோதல் நிலவி வருகிறது.

எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் சப்போர்ட், இபிஎஸ் சப்போர்ட் என்று பிரிந்துள்ளனர். இந்த நிலையில் இபிஎஸ் இதுவரை தமிழக அரசை பாராட்டவில்லை. அவருக்கு நெருக்கமான சில அதிமுக எம்எல்ஏக்களும் கூட அரசை பாராட்டவில்லை.

ஓபிஎஸ் மற்றும் மற்ற சில எம்எல்ஏக்கள் மட்டுமே இப்படி அரசை பாராட்டுகிறார்கள். இதுதான் இன்னும் சந்தேகத்தை வலிமையாக்கி உள்ளது. திமுக அரசை பாராட்டுவதில் கூட அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்னதான் நடக்கிறது என்று கேள்விகள் எழுந்துள்ளது.

ஒரு பக்கம் திமுக ஆட்சியை இபிஎஸ் விமர்சிக்கிறார்.. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் பாராட்டுகிறார். எதற்காக இதில் கூட கருத்து வேறுபாடு என்று கேள்வி எழுந்துள்ளது.

அரசியலில் எதுவும் சாதாரணமாக நடந்து விடாது.. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அப்படி இருக்கும் போது ஓபிஎஸ் உள்ளிட்ட சில அதிமுக தலைகள் திமுகவை பாராட்டுவதற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும்.. எதை மனதில் வைத்து பேசுகிறார்கள்.. எதற்காக திமுகவிடம் நெருக்கமாக பார்க்கிறார்கள் என்பதுதான் தற்போது புதிராக உள்ளது!

எடப்பாடிக்குத் தெரியாமல் ஓபிஎஸ் அளித்த கப்சா பேட்டியில், “என்னை என்ன தர்மத்துக்கு யோகா செய்யும் தண்டச்சோறுன்னு நினைச்சீங்களா திமுக ஸ்லீப்பர் செல்லே நாந்தான்!” என்று உண்மையை உளறிக் கொட்டினார்.

பகிர்