சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான்.  தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்” என்று அவர் தெரிவித்தார். 

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி 2026ஆம் ஆண்டு வர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தமிழக மக்களின் கருத்தாகவும் அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் கருத்தாகவும் இன்றைக்கு உள்ளது.

தேவைப்பட்டால் அடியில் தீ மூட்டி நடுவில் முள்படுக்கை அமைத்து தர்மயுத்தத்தில் ஈடுபடுவேன். என் டிக்கி பாழானாலும் அதிமுக வெற்றி பெறுவதே முக்கியம் என்றார்.

பகிர்