EPS eating Biriyani

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஏப்ரல் 3 2025 அதிகாலையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும் எதிராக 233 பேரும் வாக்களித்திருந்தனர்.

தொடர்ந்து, மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. மறுநாள் அதிகாலை வரை நடந்த இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 128 பேரும் எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன், தர்மர் என 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தர்மர் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.

மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்துப் பேசியிருந்தார்.

தொடர்ந்து, அ.தி.மு.க-வின் நான்கு உறுப்பினர்களும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் நள்ளிரவில் நடந்த வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி, தம்பிதுரை, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது” எனக் கூறினார்.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வாக்களித்தார். அதேபோல மாநிலங்களவையில் உள்ள 11 அ.தி.மு.க உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அ.தி.மு.க தனி அணியாக சந்தித்தாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வரவில்லை.

பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க மீது சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விவசாய முதல்வர்  என்று பெயர் எடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு வாய்க்கால் வரப்புகளில் பாண்டி ஆட்டம் ஆடி நல்ல பயிற்சி உண்டு. புயல் மழை சமயங்களில் கூட சேறு சகதி பார்க்காமல் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு குடை பிடித்தபடி மீடியா சகிதம் நலம் விசாரிக்க கிளம்பி விடுவார். எனவே ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்து விளையாடுவது (வக்பு எதிர்ப்பு-பாஜக ஆதரவு) என்பது மிகவும் சுலபம் என்று உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர் நகைச்சுவையாக கூறுகிறார்.

பகிர்