தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.8) காலை தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார்.
அந்த நிலையில், அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தத், தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திமுகவின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையை தட்டி நம்முடைய நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன்” என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் மேசையை தட்டி நன்றியை தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பினை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை, அனைத்து கட்சி, மன்னிக்கவும்… ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து…” என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, “எதிர்க்கட்சி” என பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதற்றத்தில் இருக்கிறேன் நான். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்று சமாளித்தார்.
முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் இல்லாதபோது, சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் மேடைக்கு மேடை துண்டு சீட்டு வைத்துக்கொண்டு ஷேக் அலாவுதீன் என்பதை ‘ஜெயக்கடா ‘ என்றும் மதில் மேல் பூனை என்பதை ‘பூனை மேல் மதில் மேல்’ என பலவாறாக உளறிக்கொட்டி மீம் மெட்டிரியலாக உலா வந்தார். ஆட்சி செய்வது யார் என்றே தெரியாத அளவுக்கு மகிழ்ச்சி அவரை ஆட்கொண்டு விட்டது. சுகர் மாத்திரையை வேறு மறந்துவிட்டார், ஜிம்மிற்கு போவதற்கும் நேரமில்லை என்றது அறிவாலய ‘பட்சி’ ஒன்று.










































