திண்டிவனம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும், அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.கட்சியின் இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்ததுதான் இதற்குக் காரணம். தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு பலரின் புருவங்களை உயர்த்தியது. தனது தந்தையை கடுமையாகக் குறைகூறிய அன்புமணி, “கட்சியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் அவருக்கு (முகுந்தன்) பொறுப்புகள் வழங்கப்படுகின்றன” என்றார். “பாமக குடும்பக் கட்சியா?” என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பிய அன்புமணி, கோபத்தைக் காட்டும் விதமாக மைக்கை கீழே வைத்தார்.
அன்புமணியின் கோபத்தைக் கவனித்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியதும் வன்னியர் சங்கத்தை உருவாக்கியதும் நான்தான். நான்தான் முடிவை எடுப்பேன். கட்சியில் இருக்க விரும்பாத எவரும் கட்சியை விட்டு வெளியேறலாம்” என்று பதிலளித்தார். அன்புமணி மேலும் கூறுகையில், “சென்னை பனையூரில் புதிதாகக் கட்டப்பட்ட எனது அலுவலகத்தில் தன்னார்வலர்கள் இப்போது என்னைச் சந்திக்கலாம்” என்றார்.
இந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பா.ம.க. தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.










































